தென்காசி: கடையம், அம்பை, ஆழ்வார்குறிச்சி உள்ளிட்டப் பகுதிகளில் ஏராளமானோர் சிறு தொழில்கள் செய்து வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகப்படியானோர் செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்த செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலை அதிகப்படியான பொதுமக்கள் நம்பி வாழ்கின்றனர். மேலும் இந்த செங்கல் சூளை பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் இந்தப் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. குறிப்பாக, இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் அருகேவுள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்திலுள்ள பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி, செங்கல் எடுக்கும் பணிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
அந்த சூளையில் வேலை பார்த்து வரும் பொறி - தோனியம்மா என்ற தம்பதி, திருமணம் செய்து தற்போது தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு நேற்று (மார்ச் 15) வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடையம், கோவிந்தபேரி, முக்கூடல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வரும் அவரது உறவினர்கள் வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களது சடங்குப்படி வளைகாப்பு விழா நடைபெற்றது.