தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் இருந்து சூரியனுக்கு பயணம்.. ஆதித்யா எல்1 திட்ட இயக்குநரின் சுவாரஸ்ய தகவல்கள்! - news about Aditya L1

Aditya L1: சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பும் ஆதித்யா எல்1 விண்கல தயாரிப்பின் திட்ட இயக்குநராக தென்காசியைச் சேர்ந்த நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார்.

தென்காசியைச் சேர்ந்த நிகர் சாஜி
தென்காசியைச் சேர்ந்த நிகர் சாஜி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 3:29 PM IST

தென்காசி:உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) எட்டாத உயரத்தில் தனது கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இஸ்ரோ சந்திராயன் 3 விண்கலத்தை ஏவி, சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதுவரை உலக நாடுகள் ஆராய்ச்சி செய்யாத பகுதியை ஆராய்ச்சி செய்து, சொல்லப்படாத பல உண்மைகளை உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பல நாடுகளின் பாராட்டையும் இஸ்ரோ பெற்று வருகிறது. சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கிய சந்திராயன் 3 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இஸ்ரோ, சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்கிற அதிநவீன விண்கலத்தை தயார் செய்துள்ளது.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலன்களை அனுப்பி உள்ளன. இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி பெற்றால், சூரியனை ஆய்வு செய்யும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார்.

விஞ்ஞானி நிகர் சாஜி, தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையைச் சேர்ந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். பின்னர் மேல்நிலைக் கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அதன் பின்னர் நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடித்தார்.

தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர் சாஜியின் கணவர் வெளிநாட்டில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவரது மகள் டாக்டராகவும், மகன் வெளிநாட்டில் பொறியியல் படிப்பும் பயின்று வருகின்றனர். ஆதித்யா எல்-1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இதை பி.எஸ்.எல்.வி - சி 57 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்1 விண்கலத்தின் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரியப் புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.

இத்தகு சிறப்புமிக்க விண்கலத் தயாரிப்பின் திட்ட இயக்குநராக முதன்மையான இடத்தில் இருக்கும் நிகர் சாஜி, தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது அப்பகுதி மக்களுக்கு பெருமையை தேடி தந்துள்ளது. மேலும், சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆதித்யா எல்1 கவுண்ட் டவுன் தொடக்கம்.. இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details