தென்காசி:இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வியக்கத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரோ சந்திராயன்-3 மூலம் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உலக நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படாத பகுதியை ஆராய்ச்சி செய்து சொல்லப்படாத பல உண்மைகளை உலகத்திற்கு தெரியப்படுத்துவதன் மூலம் பல நாடுகளின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கிய சந்திராயன்-3 வெற்றியை தொடர்ந்து தற்போது இஸ்ரோ சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்கிற அதிநவீன விண்கலத்தை தயார் செய்து இன்று (செப் 2) விண்ணில் செலுத்துகிறது. சூரியனின் ஆராய்ச்சியில் இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலன்களை அனுப்பி உள்ளன.
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி பெற்றால் சூரிய ஆராய்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை பெரும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார்.
நிகர் சாஜி தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர். இவர் தனது ஆரம்ப கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்றார். நிகர் சாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது அப்பகுதி மக்களுக்கு பெருமையை தேடி தந்துள்ளது.
இவர், மேல்நிலை கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம் பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்துள்ளார். தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர் சாஜியின் கணவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மகள் டாக்டராக உள்ளார். மகன் வெளிநாட்டில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார்.
இதையும் படிங்க:Aditya-L1: சூரியனையும் தொட்டுவிடலாம்.. ஆதவனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்! இஸ்ரோ ரெடி!
ஆதித்யா எல்-1 ஆய்வு திட்டத்தின் முழு பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதித்யா செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதை பி.எஸ்.எல்.வி, எக்ஸ்எல் (சி-57) (PSLV-C57/Aditya-L1 mission) என்ற ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் சூரியனின் வெளிப் பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.