தென்காசி:அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரத நாளாகும். மேலும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த முன்னோர்களை வழிபட்டால், அவர்களுடைய அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிதுர் கடன் கொடுத்தால், அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.
அந்த வகையில், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகின்றன. அதன்படி, இந்த வருட ஆடி மாதத்தில் 2 அமாவாசை உள்ளது. இந்நிலையில், ஆடி 1ஆம் தேதி முதல் அமாவாசை முடிந்த நிலையில், இன்று 2-வது அமாவாசை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக, ஒரு மாதத்தில், ஜென்ம நட்சத்திரம் இரண்டு தினங்கள் வந்தால், 2-வது நட்சத்திரத்தையே நாம் ஜென்ம நட்சத்திரமாக கருத வேண்டும் என ஐதீகம் கூறுவதால் 2-வதாக வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாக கருதி இன்று ஏராளமானோர் தங்களது முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஆடி அமாவாசை தினத்தன்று புண்ணிய நதிகள், அருவிகள், கடல்கள் உள்ளிட்டவைகளுக்கு சென்று அங்கு புனித நீராடி, கருப்பு எள், நல்லெண்ணெய், பிண்டம் உள்ளிட்டவைகளை படைத்து தங்களது முன்னோர்களை வழிபட்டு பின்னர் பிண்டங்களை நதி, ஆறு, கடல்களில் கரைப்பது வழக்கம். அந்த வகையில், இன்று ஆடி அமாவாசை தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக குவிந்து வருகின்றனர்.