தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையில் கார் பருவ நெல் சாகுபடி நடைபெறும். இந்த சாகுபடியில் தென்மேற்கு பருவமழை நீர்தான் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும். இந்நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் கார் சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால் பருவமழை பொய்த்தது.
இதன் காரணமாகப் பருவமழையை எதிர்பார்த்து வடகரை, அச்சம்புதூர், இலத்தூர், சீவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களில் நடவுசெய்த நெல் நாற்று முற்றிலும் கருகியது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்தச் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பொருளாதார இழப்பு விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்தது. இதன் காரணமாக 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. தற்போது அணைக்கு 25 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.