தென்காசி: சங்கரன்கோவிலில் தென்னகத்தில் பிரசித்திபெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமுமான சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தக் கோயிலில் முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை சங்கன்-பதுமன் என்ற இரு பக்தர்களிடையே ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரே என்று காட்சி அளிக்க வேண்டி இந்த திருத்தலத்தில் உள்ள கோமதி அம்பாள் ஒற்றை காலில் தவம் புரிந்து இருந்தார்.
அம்பாளின் வேண்டுகோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் வலது புறத்தை சிவனாகவும், இடது புறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த புராண நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த 2023ஆம் ஆண்டுக்கான விழா கடந்த 21ஆம் தேதி கோமதி அம்மன் சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடத்தப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது.