தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஆண், பெண் இருவர் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கடையநல்லூர் காவல் துறையினருக்கு விடுதி ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் தலைமையிலான காவலர்கள் ஆண் நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிருடன் மீட்கப்பட்ட நபர் சிவகிரி அருகேயுள்ள மேல கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி வியாகப்பன் (50) என்பதும், இறந்துகிடந்த பெண் ராயகிரி பகுதியைச் சேர்ந்த மாலா (35) என்பதும், அவர்கள் இருவரும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்ததால் அடிக்கடி இந்த விடுதிக்கு வந்துசெல்வதும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:செஞ்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட விடுதிக்கு சீல் வைப்பு!