உடைந்து போன குடிநீர் குழாயில் வெயிலின் உஷ்ணத்தை தனித்த முதியவர் தென்காசிமாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், விவசாயி ஒருவர், தனது விவசாய பணிகளை முடித்துவிட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகிக் கொண்டு இருந்துள்ளது. அதனைக் கண்ட விவசாயி, தனது உடலில் வெயிலின் தாக்கத்தை குறைக்க, தனது சைக்கிளை நிறுத்தி சாலையில் வெளியேறி, வீணாகி சென்ற குடிநீரில் முகத்தைக் கழுவி, கை கால்களையும் கழுவி தனது உஷ்ணத்தை குறைத்துக்கொண்டார்.
பின்னர், அவர் மீண்டும் தனது சைக்கிளில் கை வைத்தபோது, இருக்கை சூடானதால், மீண்டும் தனது தலைப்பாகைத்துணியினை எடுத்து தண்ணீரில் நனைத்து, இருக்கையின் மீது வைத்துவிட்டு, சைக்கிளில் ஏறிச் சென்றார்.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அவ்வப்போது வீணாக செல்லும் நிலை இருக்கிறது. இதை ஒரு சிலர், தனது உஷ்ணத்தை தணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சங்கரன்கோவில் நகராட்சியினை வஞ்சப்புகழ்ச்சி செய்யும் விதமாகவும், இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் இதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவில் - ராஜபாளையம் செல்லும் சாலையில் இன்று குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சென்றது. அங்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால், மேலும் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.
சங்கரன்கோவில் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்று தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகச் சென்று வருகிறது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:கோடை வெயில் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு; உரியவிலை பெற்றுத்தர கோரிக்கை!