தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த செய்யது மசூது (வயது 32) என்பவர் தனது நண்பர்களுடன் மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோயில் நீர்த்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள வெள்ளை பாறை என்கின்ற பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரின் வேகம் காரணமாக செய்யது மசூது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளார்.
அதிலிருந்து மீள முடியாமல் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி செய்யது மசூது உயிரிழந்த நிலையில், இதை கவனித்த நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், மீட்க முடியாததால் செங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின்பேரில் விரைந்து வந்த செங்கோட்டை தீயணைப்பு துறையினர் போராடி செய்யது மசூது வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேக்கரை அடவிநயினார் கோயில் நீர்த்தேக்கத்திற்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு அரசியல் பிரமுகரின் அழுத்தத்தின் காரணமாக மேக்கரை அடவிநயினார் நீர் தேக்கத்திற்கு மேல் செல்ல கடந்த வருடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இது போன்ற தொடர் விபத்து சம்பவங்கள் அடவிநயினார் கோயில் நீர் தேக்கத்திற்கு மேல் நடப்பதால் மாவட்ட நிர்வாகம் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், தஞ்சையில் தந்தையுடன் குளத்திற்கு குளிக்கச் சென்ற இரு சகோதரிகள் படிகட்டில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் குழந்தைகள் குளத்தில் இறங்கியதால் சேற்றில் சிக்கி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"தோல்வி பயம் பாஜகவுக்கா?.. கனிமொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதா...? வெற்று அறிக்கை மட்டும் வெளியிடுவதா.."- வானதி சீனிவாசன்!