தென்காசி: தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கடந்த இரண்டு தினங்களாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை மறித்து ஆவணங்களை சரிப் பார்த்து அனுப்பினர்.
மேலும், சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைப் பிடித்து அபராதமும் விதித்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாகக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக சிறப்பு தனிப்படையினர் கொண்ட குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், திருச்சியில் பணியாற்றி வந்த கனிம வளத்துறை உதவி இயக்குநர் சத்தியசீலன் தலைமையில், மூன்று பேர் அடங்கிய குழு தென்காசி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று கனிமவளத்துறை சிறப்பு தனிப்படையினர் தமிழக - கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர் என்றும்; மேலும், தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அனைத்தையும் முறையான சோதனைக்கு உட்படுத்தி, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னரே அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தகவல் தெரியவருகிறது.