தென்காசி: சுரண்டை பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். பிறப்பிலிருந்து மாற்றுத்திறனாளியான முருகேசனுக்கு கைகள் மற்றும் கால்கள் இயல்பு நிலையில் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறுவயதில் அவரது தாய்தான் பள்ளிக்குத் தூக்கிச் சென்று அவரை படிக்க வைத்துள்ளார். மேலும், மேற்படிப்புக்காகத் தென்காசி மாவட்டத்திலுள்ள அமர் சேவை சங்கத்திலும் சேர்த்துள்ளார்.
இதனை அடுத்து அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறிந்த அமர் சேவை சங்கம் முருகேசனுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளித்து அவருடைய கைகளில் உள்ள இரண்டே விரல்களைப் பயன்படுத்தி எழுதுவதற்கும், சைக்கிள் ஓட்டுவதற்கும் பயிற்சியைக் கொடுத்துள்ளனர்.
இதனை மூலதனமாக வைத்து தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வைகையில் தமிழில் முதுகலைப் பட்டம் வரை பயின்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய தாய்க்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு எழுத்து திறமையுடைய இவர் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுப்பதை ஆர்வமாகச் செய்ததோடு அதையே தனது தொழிலாகவும் மற்ற முயன்றுள்ளார்.
மேலும் முருகேசனின் இந்த முயற்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களை அவர் பக்கமாக ஈர்த்தது. இதன் மூலமாகச் சிறு சிறு உதவிகளும், வருமானமும் கிடைத்துள்ளது. இருந்தபோதும், முருகேசன் மற்றும் அவரது தாய் இருவருக்கும் அந்த வருமானம் போதுமானதாக இல்லை.