தென்காசி:கடையநல்லூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட வடகரை பகுதியில் உள்ள வீட்டில் யானைத் தந்தம் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று வடகரை பகுதியில் உள்ள வீட்டை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அங்கே இரண்டு யானை தந்தங்கள் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக வனத்துறையினர் அவரை கைது செய்து, கடையநல்லூர் வனச்சரக அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.