தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகம் பகுதியில் காட்டுப்பன்றி, கரடி, மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் பயிர்களை நாசப்படுத்தியதோடு, அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வந்தன. அம்பாசமுத்திரம் அருகேயுள்ள முதலியார்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கூட்டமாக வரும் கரடிகள் சப்போட்டா, மா, தென்னை, நெல்லி உள்ளிட்டவற்றை நாசப்படுத்தியது.
இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சமடைந்து வந்தனர். கரடிகளை பிடிக்க வேண்டுமென வனத்துறையிடம் புகாரும் அளித்தனர். அதனடிப்படையில், வனத்துறையினர் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுவரை 5 கரடிகள் பிடிபட்ட நிலையில் இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்தக் கூண்டில் மேலும் ஒரு கரடி சிக்கியது. இந்தத் தோட்டத்தில் பிடிபட்ட 6ஆவது கரடி என்பது குறிப்பிடத்தக்கது.