பாறைப்பட்டி கிராமத்தில் நேற்று இரவு ஒரே நேரத்தில் 7 பேரை வெறிநாய் தாக்கியுள்ளது தென்காசி:சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும்சேவல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம், பாறைப்பட்டி. இந்த கிராமத்தில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தைச் சுற்றிலும் ஸ்பின்னிங் மில் மற்றும் நூற்பாலைகள் அதிகமாக உள்ளன. ஆகையினால், இந்த ஆலைகளில் வேலை செய்து முடித்து விட்டு, பலதரப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வருவது வழக்கம்.
மேலும் இந்தப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் இரவு நேரங்களில் தண்ணீர் பாய்வதற்கும் மற்றும் வயல்வெளியில் நள்ளிரவில் பாதுகாப்புப் பணிக்கும் ஏராளமான ஆண்கள் செல்வர். மேலும் இந்த கிராமத்தைச் சுற்றிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் உள்ளன. பாறைப்பட்டி கிராமத்தினர் விவசாயம், நூற்பாலையின் வேலைகள், பட்டாசு தொழில் போன்றவற்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் இதே போல் நேற்றும் வேலையை முடித்துவிட்டு ஊருக்குள் வந்துள்ளனர். அப்பொழுது வெறிநாய் ஒன்று மக்களை விரட்டி கடித்து உள்ளது. இந்த வெறிநாய் கடித்ததில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை உடனடியாக அழைத்த பொது மக்கள், முதலில் காயமுற்ற பெண்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
வெறிநாய் கடித்ததில் சுமார் 7 பெண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் ஒரே நேரத்தில் வேலம்மாள் (வயது 60), பேச்சியம்மன் (வயது 60), கிருஷ்ணம்மாள் (வயது 40), குருவம்மாள் (வயது 70), ராமத்தாள் (வயது 60) உட்பட 7 பேர் வெறிநாய் கடிக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் கவலைக்கிடமான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் பிரேமலதா நாய் கடித்து சிகிச்சைப் பெற வந்தவர்களின் விவரங்களைக் கேட்டறிந்து விரைவாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அனைவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரவு நேரத்தில் வெறிநாய் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த, பொது மக்களை விரட்டி விரட்டி கடித்ததில் இரவு நேரத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வெறிநாய் கடித்ததில் கிராமமே தூக்கமின்றி தவித்து உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உட்பட பல மாநிலங்களிலும் வெறிநாய்கள் சிறார்கள் முதல் அனைவரையும் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க:பிரதமர் மோடி படத்தை அவமதிப்பு செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் 25 பேர் மீது வழக்கு!