சங்கரன்கோவில் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள தாருகாபுரம் பகுதியில் உள்ள மலைச்சரிவுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த பகுதியாக இருக்கும் எனவும், உடனடியாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் அருகே தாருகாபுரம் கிராமம் உள்ளது. அப்பகுதி முழுவதும் மலையால் சூழப்பட்ட நிலையில், மலையின் அடிவாரத்தில் இரண்டு கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பணி நடைபெற்றது.
புதைந்து கிடக்கும் முதுமக்கள் தாழி அப்போது, அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் மணல் எடுக்கத் தோண்டி உள்ளனர். அப்போது கற்களும், பானைகளுமாக காணப்பட்டதால், அங்கு மணலை எடுக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், சென்னை தரமணியில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் தொல்லியல் துறை மாணவர் விஜயகுமார் மற்றும் அவருடன் பயிலும் அப்பகுதி மாணவர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் மலைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, தாருகாபுரம் மலையை ஆய்வு செய்யும்போது அங்கு முதுமக்கள் தாழி இருப்பதை பார்த்துள்ளனர். மேலும், அப்பகுதிகளைச் சுற்றிலும் உடைந்த பானைகளும், மண்ணில் புதைக்கப்பட்ட நிலையிலும் நிறைய பானைகள் தெரிந்துள்ளது. பின்னர், விஜயகுமார் உடனடியாக தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு இந்த முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து இப்பகுதிகளில் அகழ்வாய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்து மலை அடிவாரப் பகுதியில் வேறு ஏதேனும் பழங்காலப் பொருட்கள் உள்ளனவா என ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனவும் இந்தப் பகுதியினுடைய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டைய தமிழர்கள் வாழ்ந்த அடையாளம்: ஏற்கனவே, தமிழகம் முழுவதும் நாகரீக வளர்ச்சியில் அடிப்படை படிமங்கள் கிடைத்து வரும் நிலையில், சங்கரன்கோவில் அருகே உள்ள தாருகாபுரம் கிராமப் பகுதியில் உள்ள மலையடிவாரங்களில் கிடைத்துள்ள இந்த முதுமக்கள் தாழி முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலையின் தென்திசையில் 1 கிலோ மீட்டர் தொலைவில் நிட்சேப நதி உள்ளதால், அந்தப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான நிறைய அடையாளங்கள் கிடைக்கக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இது குறித்து தொல்லியல் துறை மாணவர் விஜயகுமார் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளிடம் கூறியதாவது, “ கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம். இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, பானை ஓடுகள் ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் தமிழக அரசு அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். இதுபோல் இந்த மலையின் மேற்புறமும், கீழ்புறமும் ஏராளமான முதுமக்கள் தாழி புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த முதுமக்கள் தாழிகள் எவ்வளவு பழமையானது என ஆராய்ச்சி செய்தால் மட்டுமே தெரிய வரும். நிறைய பானைகள் உள்ளதால், இதில் அவர்கள் இறந்தவர்களை புதைத்திருக்கலாம்.
இப்பகுதியில் உடனடியாக அகழ்வாய்வு செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தொல்லியில் துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதியை ஆராய்ச்சி மேற்கொள்ளுமாறு மனு அளித்துள்ளேன்” என்றார். மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரித்தபோது, “100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் இதை தோண்டப்படும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பகுதியின் வருவாய் அலுவலர்களிடமும் பஞ்சாயத்து தலைவரிடமும் அரசு அதிகாரிகளிடமும் முறையான அறிவிப்பு கொடுத்துள்ளோம்” என கூறினர். இதைத்தொடர்ந்து தாருகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் காளீஸ்வரி, மலையடிவாரத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அழிவின் விளிம்பில் பறவை இனங்கள் - பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் எச்சரிக்கை என்ன?