கன்னியாகுமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பொழிந்துவருகிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள குண்டாறு, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டிவிட்டன.
நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிந்துவரும் சூழலில் பாதுகாப்பு கருதி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட பொதுப்பணித் துறையினர் முடிவெடுத்துள்ளனர். இதன் காரணமாக அணைகளிலிருந்து நீர் வெளியேறும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தின் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் குளிக்க வரும் (ஜன.17) ஞாயிற்றுக்கிழமைவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவியில் ஆயாசமாக இருந்த 12 அடி மலைப்பாம்பு - வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்ட வனத்துறை! மலை பகுதியையொட்டியுள்ள காரணத்தால் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில் அருவியில் ஊர்வன அடித்து வரப்படுவது வழக்கம். அங்குள்ள பொங்குமா கடலருவி மூலம் ஊர்வன தண்ணீரில் அடித்து குற்றாலம் அருவிக்கு வருவது பெரும்பாலும் தடுத்து நிறுத்தப்படும்.
இந்நிலையில் இன்று குற்றாலம் மெயின் அருவியில் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் நீரில் அடித்து வரப்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குற்றால காவல் துறையினர், மலைப்பாம்பு வெள்ளத்தில் சிக்கி, மெயின் அருவியில் உள்ள தடுப்பு கம்பியில் சுற்றி இருப்பதாக குற்றால வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மெயின் அருவிக்கு வந்த குற்றால வனத்துறையினர் 12 அடி மலை பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
12 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பு அருவியின் ஓடை வழியாக அடித்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க :வெள்ளத்தில் மிதக்கும் விவசாய பயிர்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை