தென்காசி: புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதன் சுற்று வட்டார கிராமங்கள் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 18) இப்பள்ளியில் பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில் உள்ள பிச்சாண்டி தெருவைச் சேர்ந்தவர் மாணவி. இவரது தந்தை, மாணவிக்கு இரண்டு வயதாக இருக்கும் நிலையில் உயிரிழந்துள்ளார். எனவே, தாய் மட்டுமே கூலி வேலைக்குச் சென்று தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். இதனிடையே, மாணவி அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் மிகவும் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், புளியங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.