தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து குணமடைந்த 100 வயது மூதாட்டி - அரசு மருத்துவர்கள் சாதனை - அரசு மருத்துவர்கள் சாதனை

தென்காசி : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிக அளவு மூச்சுத் திணறலுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து, தொற்றிலிருந்து அவரை மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.

 100-year-old grandmother recovers from corona at tenkasi
100-year-old grandmother recovers from corona at tenkasi

By

Published : Sep 9, 2020, 8:25 PM IST

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் இதுவரை ஐந்தாயிரத்து 121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய் அறிகுறிகளுடனும், அதிக மூச்சுத்திணறலுடனும் 100 வயது மூதாட்டி இசக்கியம்மாள் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் இவருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்ததில் தொற்று அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. பின்னர், அதிக அளவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவர் நுரையீரல் பாதிப்பால் கரோனா தொற்றுக்குள்ளானது தெரியவந்தது.

இதையடுத்து அவர், ஆறு நாள்கள் கரானோ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் இன்று (செப்.9) அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இது குறித்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறும்போது, “கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்பு கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தக்க சிகிச்சைப் பெற்று, நோயிலிருந்து தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் உயிரிழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details