சிவகங்கை:தேவகோட்டை கம்பர் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது எலும்புக்கூடு, கைலி, சட்டை, கண்ணாடித்துண்டு போன்றவை கிடைத்துள்ளன. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சரவணன் தேவகோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சரவணன் கூறியதாவது, "9 வருடங்களுக்கு முன்பு, சுகந்தி மற்றும் பாண்டியன் என்ற இரு தம்பதியினர் தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும், பாண்டியன் ஆம்னி பேருந்து ஒட்டுநராக இருந்ததாகவும், இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். பாண்டியன்(44) அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தனர்" என காவல் நிலையத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சுகந்தியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த 2014ம் ஆண்டு தனது கணவர் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கணவரை கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டதால் உடனே கழிவுநீர் தொட்டியில் உடலை போட்டு விட்டதாகக் கூறினார். பின்னர் 6 மாதங்கள் அதே வீட்டில் குழந்தைகளுடன் வசித்து விட்டு, பின்னர் வேறு வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.