சிவகங்கை: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரின் ஆட்டம் பாட்டத்துடன் இத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் வைத்து சுவாமி வேடங்கள், எமதர்மன், கிழவன், கிழவி, குறவன், குறத்தி என்றும் குழந்தை வரம் வேண்டுவோர் வைக்கோல் பூதம் என பல்வேறு வேடங்களில் வந்து தங்களது நேர்த்தி கடன்களை இத்திருவிழாவில் செலுத்தினர். இவ்வாறு இவர்கள் வேடம் அணிந்து செகுடப்பர் சுவாமியை வேண்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மேலும் இதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் எந்த ஒரு நோய் நொடி வருவதில்லை எனவும் மற்றும் கிராமத்தில் நல்ல மழை பொழிந்து விவசாயம் நன்றாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இக்கிராமத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் மற்றும் கருப்பு கலர்களில் பொட்டு வைத்து வரவேற்கின்றனர். மேலும் பக்தர்கள் இங்கு இருக்கும் சுவாமிக்கு இரும்பு, ஈயம், வெள்ளி போன்ற பொருள்களில் வேல் காணிக்கை செலுத்துகின்றனர்.