சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தத் தேர்தல் ஜனநாயகமா? பாசிசமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கிற தேர்தல். பாஜகவினர் ஆட்சியை தக்கவைக்க எதையும் செய்ய துணிவார்கள். பெரியார் இழிவுபடுத்தப்படுகிறார் என்றால் தமிழ் மண் இழிவுபடுத்தப்படுகிறது என்று அர்த்தம்.
மோடி ஒவ்வொரு நாளும் ஆபத்தான, தவறான தகவல்களை சொல்லிவருகிறார். இந்து மதத்தை யாரும் குறைத்து பேசவில்லை. ஆனால் ஏதாவது வன்முறை சம்பவங்களில் இந்துத்துவா அமைப்புகள் ஈடுபட்டது உண்டா? என்று மோடி கேட்கிறார். காந்தியடிகளை கோட்சே சுட்டு கொல்லவில்லையா? இது மோடிக்கு தெரியாதா? இந்துக்களை போல் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் அவரவர் ஆலயங்களில் வழிபாடு நடத்துகின்றனர்.
அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே மதச்சார்ப்பற்ற தன்மை. அதற்கு வேட்டுவைக்க முடிவு செய்ததன் விளைவுதான் கலவரம் நடைபெற காரணம். பெரியாரை இழிவுபடுத்தியவரை (ஹெச்.ராஜா) வைப்புத்தொகை இழக்கச் செய்யுங்கள். தமிழ்நாட்டில் 6.2 விழுக்காடு பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.