சிவகங்கை:தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் சாந்தி, கடந்த நான்கு மாதங்களாக ராம்நகர் ஆணையர் குடியிருப்பில் வசித்து வருகிறார். தனது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள, சமைக்க, துணி துவைக்க, வீடு பராமரிக்க உள்ளிட்டப் பல்வேறு வேலைகளை நாள்தோறும் செய்திட அவர் நகராட்சி பணியாளர்களைப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நகராட்சிப்பணியாளர்களான பானுமதி, சுப்புலட்சுமி, வள்ளி, நாகராணி ஆகிய 8 பேரை நகராட்சிப் பணியில் ஈடுபடுத்தாமல் தனது வீட்டுக்கே வேலைசெய்யும் கொத்தடிமைகளாக நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், சென்னைக்கும், கோவைக்கும் நகராட்சி வாகனத்தை எடுத்துக்கொண்டு மாதம் இருமுறை சென்று தங்கி வருவதாகவும், நகராட்சி அலுவலக உதவியாளர் முருகன் மூலமாக புதிய புதிய வரி விதிப்பது, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, அனைத்து சான்றிதழ்கள் எனப் பட்டியல் போட்டு வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் பல எழுந்துள்ளன.