மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், இளையான்குடி மற்றும் சாலைக்கிராம நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் உரிய அனுமதியின்றி, சாதி மற்றும் சமுதாயம் சார்ந்த கொடிக் கம்பங்கள், கல்வெட்டுச் சுவர்கள், போஸ்டர்கள், இரும்பிலான தற்காலிக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி மற்றும் காவல் துறையின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர், போஸ்டர், கொடிக் கம்பங்களால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாவும், சாலையின் இரு புறமும் வைக்கப்பட்டுள்ள போஸ்டர், பேனர்களால் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்வதாகவும், அதிகளவில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட சாதி மற்றும் சமுதாயம் சார்ந்த கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள், போஸ்டர்களை துரித நடவடிக்கையின் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.