சிவகங்கை: சிங்கம்புணரி பகுதியில் கலைநயத்துடன் உருவாக்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான வண்ணமிகு மணிமாலை மிகவும் பிரபலமானது. கண்களை கவரும் வண்ண வண்ண நூல்களை கொண்டும், நெஞ்சை மயக்கும் சப்தம் மிகுந்த சலங்கைளும் சேர்க்கப்பட்டு இந்த மணிமாலைகள் உருவாக்கப்படுகிறது. தைப்பொங்கல் நாளில் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் இந்த மணிமாலைகளை அணிவித்து அழகு பார்ப்பது ஜல்லிக்கட்டு காளையர்களின் அதிக விருப்பமான ஒன்றாகும்.
வெண்கல நாயக்கன்பட்டி மணி, ஆறா வயல் மணி, 8 அறுவை மணி, அறியக்குடி மணி உள்ளிட்ட வகை வகையான மணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மணிமாலைகள் சுமார் ரூ.1500 முதல் 10,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் இந்த மணிமாலைகளை வாங்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்வார்கள்.
இந்த வண்ணமிகு மணிமாலைகள் அணிவிக்கப்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவிழ்த்து விடும்போது அதிலிருந்து எழும்பும் 'ஜல் ஜல்' ஓசை காளையின் வீரத்தையும் வேகத்தையும் அதிகப்படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த அழகான மணி மாலைகளுடன் ஓடி வரும் இந்த ஜல்லிக்கட்டு காளைகளைக் கண்டு அனைவரும் மகிழ்வார்கள்.