சிவகங்கை:திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் இந்தியத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 4-ஆம் கட்ட அகழாய்விலிருந்து தற்போது நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வு வரை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை பல்லாயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. உறைக்கிணறுகள், பாசிமணிகள், கருப்பு சிவப்பு பானையோடுகள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், சுதை பொருட்கள் மேலும் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடுகள் என பல்வேறு பழமையான சின்னங்கள் கிடைக்கப்பட்டு வருகின்றன.
கருங்கல்லால் ஆன பல்வேறு வகையான அளவுகள் கொண்ட எடைக்கற்கள் கீழடியில் கிடைத்து வரும் நிலையில், அண்மையில் படிகத்தால் ஆன கிறிஸ்டல் குவார்ட்ஸ் எடைக்கல் ஒன்று 8 கிராம் அளவில் கண்டெடுக்கப்பட்டது. எடைக்கல் ஒன்று கிறிஸ்டல் குவார்ட்ஸ் வகையில் கிடைத்துள்ளது இதுவே முதன்முறை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுக் குழி ஒன்றில் 190 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பானையோடுகளை வகைப்படுத்தும் பொழுது, சற்றே உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும், வாய் பகுதியும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.