தமிழ்நாடு

tamil nadu

சிவகங்கையில் புரவியெடுப்பு திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

By

Published : Dec 15, 2021, 6:37 PM IST

சிவகங்கை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் தங்கள் உடல் முழுவதும் சகதியைப் பூசிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கையில் வினோத திருவிழா
சிவகங்கையில் வினோத திருவிழா

சிவகங்கை:சிவகங்கை அடுத்து தமராக்கி, குமாரபட்டி, கள்ளங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஏராளமானோர் வழிபடும் அய்யனார், ஏழைகாத்த அம்மன் கோயில் உள்ளது. இதில் அய்யனாருக்கு புரவியெடுப்பு (குதிரையெடுப்பு), ஏழைகாத்தாள் அம்மனுக்கு மது எடுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

15 நாள்களுக்கு முன்பு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுவான மந்தையில் சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 14ஆம் நாள் அய்யனாருக்குப் குதிரையெடுப்பு, 15ஆம் நாள் ஏழைகாத்தாள் அம்மனுக்கு மது எடுப்பு என வெகு விமரிசையாகத் திருவிழா நடைபெறும்.

இந்த இரண்டு நாள் திருவிழாவிலும் இளைஞர்களும், சிறுவர்களும் தங்கள் உடல் முழுவதும் சகதியைப் பூசிக்கொண்டு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தும் விநோத நிகழ்ச்சி நடைபெறும்.

நேர்த்திக் கடன்களைச் செலுத்திய பக்தர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் திருவிழாக்கள் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழாக்களைக் கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அய்யனாருக்கு 20-க்கும் மேற்பட்ட மண் குதிரைகளை எடுத்துவந்து தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்திய பக்தர்கள், அதனைத் தொடர்ந்து ஏழைகாத்தாள் அம்மனுக்கு மது எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.

இத்திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் தங்கள் உடல் முழுவதும் சகதியைப் பூசிக்கொண்டு விநோதமான முறையில் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். இவ்விழாவில் சிவகங்கை, மேலூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திருவிழாவைச் சிறப்பித்தனர்.

திருவிழாவின் சிறப்பு

இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "தோல் நோய் ஏற்படாமல் இருப்பதற்காக உடலில் சகதியைப் பூசிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு தொன்றுதொட்டு நடந்துவருகிறது.

திருமணம் நடைபெறாமல் இருப்பது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது போன்றவற்றை நிவர்த்திசெய்வதற்காக இவ்வாறு நாங்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறோம்" என்று தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:வைகுண்ட ஏகாதசி விழா: கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details