சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய அரசு தலைமை மருத்துவமனையில், ’இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களைச் சந்தித்து சிகிச்சை முறை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சித்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், 'சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். கூடிய விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும். சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே 19.2 ஏக்கர் நிலம் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சித்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.