சிவகங்கை:பையூர் பகுதியில் கருப்பு நிற கற்கள் காணப்படுவதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு 3500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால இரும்பு உருக்காலை கழிவு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், "பையூரின் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள இராகினிப்பட்டி கண்மாயில் இரும்பு உருக்காலை கழிவு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உலகில் மற்றவர்கள் அறியும் முன்னே தமிழர்கள் இரும்பு பயன்பாட்டை அறிந்திருந்தனர். இரும்பை இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுத்து கருவி செய்யும் தொழில் நுட்பத்தையும் பரவலாக பெற்றிருந்தனர். குடிசைத் தொழில் போல, வேண்டும் இடங்களில் அவர்களே இரும்பை உருவாக்கியிருக்கலாம். அப்படியான ஒன்றே இங்கு காண கிடைத்திருக்கிறது.
குவியல் குவியலாக இரும்புக் கழிவுகள் :இராகினிபட்டி கண்மாயில் ஆறு இடங்களில் அடுத்தடுத்து குவியலாக இரும்புக்கழிவுகள் தென்படுகின்றன. இக்கற்களை உடைத்துப் பார்த்தால் அவை இரும்புகளைப் போல காணப்படுகின்றன. இரும்பு கழிவுகள் காணப்படும் இடங்களில் மண்ணாலான குழாய்களும் காணப்படுவது இரும்பு உருக்காலைகள் இருந்ததை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இவை இரும்பை வார்த்தெடுக்கவோ அல்லது இக்குழாய் வழியாக காற்றைச் செலுத்தி நெருப்பை அணையாது வைக்கவோ இக் குழாய்கள் பயன்படுத்தி இருக்கலாம்.
புறநானுற்றில் இரும்பு குறித்து பாடல் :புறநானுற்றுப்பாட்டில் காளையார்கோவிலில் இரும்பு உவமை. 'கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிது' (புறநானூறு, 21). கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாகவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார். இப்பாடலில் கூறப் பெறும் உவமை இப்பகுதியில் அடிக்கடி கண்ணுற்று புலவர் கூறியிருக்கலாம்.