தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கொலைக்காக சிறைக்குச் செல்லும் முதலமைச்சராக எடப்பாடி இருப்பார்..!' - ஸ்டாலின் அதிரடி - கோடநாடு

சிவகங்கை: "ஊழல் செய்து சிறைக்குப் போனவர் ஜெயலலிதா. கொலைக்காக சிறைக்குச் செல்லும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார்" என, கீழடி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சபைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின்

By

Published : Feb 5, 2019, 7:56 PM IST


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று கீழடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசியதாவது,

கல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, அனைவரும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தியது பற்றி ஆச்சரியத்துடன் கேட்டனர். திமுகவில் அந்தளவுக்கு கட்டமைப்பை பலப்படுத்தி இருக்கிறோம். சிறப்பான வழிமுறைகளை வகுத்துக் கொண்டு நடத்துவதில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடிகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற நாடாளுமன்றத் தேர்தலோடு ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அதனால் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். 21 சட்டமன்றத் தொகுதிகளில் நானும், பிற தொகுதிகளில் திமுக மூத்த நிர்வாகிகளும் வருகிற பிப்ரவரி 17க்குள் அனைத்து கிராமசபை ஊராட்சிக் கூட்டங்களையும் நடத்தி முடிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

இந்தக் கீழடியில் கடந்த 2016 முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரியை வைத்து அகழாய்வுப் பணியை கீழடியில் மத்திய அரசு தொடக்கியது. பின்னர் தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலகில் இருந்து மறைக்க, பிரதமர் மோடி அரசு அந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அதிகாரியை மாற்றி, அகழாய்ராச்சிக்குத் தடையை ஏற்படுத்தியது. மறுபடியும் இரு நாட்களுக்கு முன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு, கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடரும் என அறிவித்து இருக்கிறார் பிரதமர்.

அவர் கடந்த வாரம் வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மதுரையில் அடிக்கல் நாட்டினார். அதற்கு நிதி ஒதுக்கினாரா?. தமிழகத்தில் 11 மாநகராட்சிகளை ஸ்மார்ட் சிட்டியாக்குவேன் என்றார்? ஆக்கி விட்டாரா?. சொன்னதை எதையும் அவர் தமிழகத்தில் செய்யவில்லை. சொன்ன திட்டங்கள் எதையும் பிரதமர் மோடி நடைமுறைப் படுத்த வில்லை.

கலைஞர் 5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்து விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினர்க்கும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். உழவர் சந்தை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் வாரியம், சிமெண்ட் சாலைகள், மினி பஸ் வசதி என எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தினோம்.

திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்தோம். சுழல் நிதிகள் கொடுத்தோம். இன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் அநாதையாக இருக்கின்றனர். அவை மாற வேண்டும். அதற்காகத்தான் உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன்.

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ஆறாயிரம் என 3 தவணைகளில் தரப் போகிறோம் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது திருட்டுத்தனம் தான். உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்திற்கும் ஜிஎஸ்டி வரி போட்டு பணத்தை வசூலித்து, விவசாயிகள் பணத்தையே உதவித் தொகையாக தந்து திருட்டுத் தனம் பண்ணுகிறார் மோடி. அதுவும் இது ஒரு டிரைலர்தான் (Trailor). நான்கரை வருடங்கள் ஆட்சிக்குப் பிறகு பிரதமர் மோடி டிரைலர் விடுகிறார். அதை விட மோசமானவர் தமிழக முதல்வர் எடப்பாடி.

கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது தினமும் காலையும் மாலையும் உடல் நிலைக் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தோம். ஆனால் ஜெயலலிதாவின் சிகிச்சை மர்மமாகவே இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டு பிடித்து சிறையில் அடைப்போம்.

கலைஞர் இறந்த பிறகு அவரது சமாதியில் காலையும் மாலையும் ஆயிரக்கணக்கானவர் புகழாஞ்சலி செலுத்துகிறார்கள். ஆனால் ஜெயலலிதாவிற்கு அதிமுக அமைச்சர்கள் இதுவரை புகழாஞ்சலி நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்களா?.

கொடநாடு எஸ்டேட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்க, அங்கே இருக்கும் பென்டிரைவைக் (pendrive) கைப்பற்ற ஐந்து கொலைகளை செய்திருக்கிறார்கள். அதை செய்யச் சொன்னவர் முதல்வர் எடப்பாடி என பகிரங்கமாக குற்றம் சாட்டப்படுகிறது. ஊழல் செய்து சிறைக்குப் போனவர் ஜெயலலிதா. கொலைக்காக சிறைக்குச் செல்லும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கீழடியின் அகழ்வாராய்ச்சி அறிக்கைப் பெற்ற பிறகு, தமிழகத்திற்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து, உங்கள் பகுதிக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை வழங்குங்கள்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். உங்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு, உள்ளாட்சித் தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு, உங்கள் கிராமப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details