'மூன்று இடத்தில் திமுக; மூன்றாம் இடத்தில் நாதக' - சிவகங்கை முழு விபரம் - காரைக்குடி தொகுதியில் ஹெச் ராஜா தோல்வி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நேற்று (மே 2) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் நடைபெற்றது. இதற்காக மூன்று அடுக்கு பாதுகாப்பில் சுமார் 3 ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 67 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
சிவகங்கை தொகுதி:
சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் 81 ஆயிரத்து 992 வாக்குகள் பெற்று 11 ஆயிரத்து 240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சிபிஐ சார்பில் போட்டியிட்ட எஸ். குணசேகரன் 70 ஆயிரத்து 752 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ரா.மல்லிகா 22 ஆயிரத்து 477 வாக்குகளும், அமமுக சார்பில் போட்டியிட்ட கி.அன்பரசன் 19 ஆயிரத்து 753 வாக்குகளும், சமக சார்பில் போட்டியிட்ட சி.ஜோசப் 304 வாக்குகளும், நோட்டாவுக்கு ஆயிரத்து 264 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
மானாமதுரை தொகுதி :
இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழரசி 89 ஆயிரத்து 364 வாக்குகள் பெற்று 14 ஆயிரத்து 91 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் நெட்டூர் நாகராஜன் 75 ஆயிரத்து 273 வாக்குகளும், அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி 10 ஆயிரத்து 231 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முக பிரியா 23 ஆயிரத்து 228 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவசங்கரி 2 ஆயிரத்து 219 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
காரைக்குடி தொகுதி:
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 73 ஆயிரத்து 334 வாக்குகள் பெற்று 21 ஆயிரத்து 838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் ஹெ.ராஜா 52 ஆயிரத்து 496 வாக்குகளும், அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி 44 ஆயிரத்து 178 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ச.மீ. ராசகுமார் 8 ஆயிரத்து 226 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரைமாணிக்கம் 23 ஆயிரத்து 596 வாக்குகளும் பெற்றனர்.
திருப்பத்தூர் தொகுதி:
திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே ஆர் பெரிய கருப்பன் 1 லட்சத்து 3 ஆயிரத்து 682 வாக்குகள் பெற்று 37 ஆயிரத்து 374 வாக்கு வித்தியாசத்தில் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் 66 ஆயிரத்து 308 வாக்குகள் பெற்றுள்ளார்.