சிவகங்கை மக்களவைத் தேர்தல் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை இடைதேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் செல்வதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஜெயகாந்தன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் பேசியதாவது:
இத்தொகுதியில் 3172 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1856 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றது. இத்தேர்தலில் 470 வெப்கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில், 163 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2341 காவல்துறையினர், 250 துணை ராணுவ வீரா்கள் மற்றும் 10,873 தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை 46 இடங்களில் ரூ. 81,81,152 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான சக்கரநாற்காலி வசதி வாக்குச்சாவடி மையங்களில் செய்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பேருந்து வசதி, குடிநீர், தங்கும் வசதி, உணவு என அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக, எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என அவர் தெரிவித்தார்.