சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உயர் அலுவலரின் நெருக்கடியால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி பணியாளர் சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
காளையார்கோவிலை அடுத்துள்ள இரும்பூர் கிராமத்தில் செயல்பட்டுவருகிறது அங்கன்வாடி மையம். இந்த மையம் வாடகை கட்டடத்தில் இயங்கிவருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த அங்கன்வாடியில் பணியாளராக இருப்பவர் சுதா.
இவர் நேற்று மாலை காளையர்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றம் செய்வது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலர் பஞ்சவர்ணம் என்பவரிடம் பேச வந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் தற்கொலை காணொலி
அங்கன்வாடி ஊழியர் தற்கொலை இந்நிலையில் அங்கு அவர் அவதூறாகப் பேசியதாகவும் அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறி பணியாளர் சுதா தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதுடன் அதனைக் காணொலியாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார்.
இதனை அறிந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு காளையார்கோவில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதுடன் தற்சமயம் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்த நிலையில் அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:திமுக வட்டச் செயலாளர் கொலை: இருவர் கைது