சிவகங்கை:தொல்லியல் குறித்து மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரையில் உள்ள தொல்லியல் தலங்களான அரிட்டாபட்டி, மாங்குளம், அழகர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு, சிவகங்கை தொல்நடைக் குழுவினர், நேற்று (டிச.28) தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர். இதில், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொல்நடைப் பயணத்தில், பார்வையிட்ட இடங்கள் குறித்து சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவநர்
கா.காளிராசா கூறியதாவது, “மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொல்நடைப் பயணம் மேற்கொள்ளுதல், பள்ளி கல்லூரிகளில் கருத்தரங்கு நடத்துதல், தொல்லியல் தலங்களுக்கு பொதுமக்களையும் மாணவர்களையும் அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அந்தவகையில், சிவகங்கை தொல்நடைக்குழு, மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, பல்லுயிர் பாரம்பரிய தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த நவம்பர் 22, 2022 ஆம் ஆண்டு அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாகும். இந்தத் தலத்தில் ஏழு சிறிய குன்றுகள் அடங்குகின்றன. இங்குள்ள மலைக்குன்றுகள் 250 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. இந்த மலைப்பரப்பில் உள்ள 72 ஏரிகள் மர்றும் 200 நீரூற்றுக் குளங்கள் மற்றும் மூன்று தடுப்பணைகள் நீராதாரமாக விளங்குகின்றன.
மேலும், இந்த பயணத்தில் இப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், கி.பி.8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரை சிவன் கோயில் ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். இதனையடுத்து, சமணப்படுக்கையில் 1971 ல் கண்டுபிடிக்கப்பட்ட 'நெல்வேலி செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த நல்முலாகை' எனும் தமிழிக் கல்வெட்டு, மகாவீரரின் புடைப்புச் சிற்பம் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டு ஆகியன பார்வையிடப்பட்டு விளக்கப்பட்டது.