சிவகங்கை:காலம் செல்லும் வேகத்தில் மனிதர்களே மனிதர்களுக்கு தீங்கு செய்யும் சூழலுக்கு மத்தியில், ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி தனக்கு உணவளித்து உதவியவரையே தனது எஜமான் என்று எண்ணிக்கொண்டு என்றுமே மாறாத பாசத்துடன் இருக்கும் ஓர் உயிரினம் உண்டு என்றால், அவை நாய்கள் தான். மற்றைய விலங்கினங்களிலும் சற்று மேன்மையானவை.
தனது எஜமானுக்காக, சமயத்தில் அந்த ஜீவன் சில நேரங்களில் எதையும் செய்யத்துணியும்; அதன் விளைவாக தனக்கு ஏற்படும் பாதகங்கள் சாதகங்கள் பற்றி ஒருபோதும், சிந்திக்காது செயல்படும். அவ்வப்போது, துணிச்சலுடன் தன்னேயே பணயம் வைத்து செயற்கரிய செயல்களில் ஈடுபட்டு, அத்தகைய ஜீவன்கள் தங்களின் இன்னுயிர்களையும் தியாகம் செய்த சம்பவமும் நடந்தது உண்டு. இவற்றிற்குப் பின், நாமும் அவைகளை மறந்துவிட்டு, நமது அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம்.
நன்றியுள்ள ஜீவனுக்கு சிலை வைத்த பெரியவர்: தமிழ்நாட்டில் இதற்கு மாறாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் விசுவாசமாகவும், வீட்டில் ஒருவருமாகவும் இருந்த செல்லப்பிராணியை அதன் மறைவுக்குப் பிறகும் அதை நினைவில் வைத்துப் போற்றும் வகையில் ஒருவர் செய்த காரியம் நம்மை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்து வியப்படையச் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இறந்த நாய்க்கு சிலை வைத்து வழிபாடு செய்து வரும் 82 வயது முதியவர் அனைவரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நாய்க்கு சிலை வைத்து வழிபாடு:மானாமதுரையைச் சேர்ந்தவர் முத்து. இவர் 'டாம்' என்கிற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இது கடந்த 2021ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளது. இதனால் வேதனையில் இருந்த முதியவர், டாமின் நினைவாக மானாமதுரையில் 'டாம்' நாய் போன்ற ஒரு சிலையை நிறுவியுள்ளார்.