சிவகங்கை: பொறியியல் ஆராய்ச்சி மாணவர், பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு ஒரு போட்டோ பேட்டரி வாகனம் தயாரித்து விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
மலம்பட்டியை அடுத்துள்ள சோனைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், போஸ்-பாக்கியம் தம்பதியினர். இவர்களது மூன்றாவது மகன் தமிழ்ச்செல்வன் ஆவார். இவர் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஆராய்ச்சி மாணவர் தமிழ்ச்செல்வன்
தற்சமயம் ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி ஒன்றில், ஆராய்ச்சி படிப்பில் 4ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதாலும் தினசரி கஷ்டங்களை எதிர்கொள்ளும் விவசாயிகளின் உடல் உழைப்பைக் குறைக்க எண்ணியிருக்கிறார். வேளாண்மைத் தொழிலில் விவசாயக் கருவிகளை உருவாக்கவேண்டும் மற்றும் அதன்மூலமாக அவர்களின் பணிகளை இலகுவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
முக்கியமாக அவரது தந்தை தனது நிலத்தில் பயிரிடும் வாழையைத் தினசரி சந்தைக்கு எடுத்துச் செல்ல வாடகை வாகனத்தை மட்டும் நம்பியிருந்த நிலை இருந்தது; வாழையை விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தில், பாதியை வாகனத்திற்கு வாடகையாக செலுத்துவதைக் கண்டு, தமிழ்ச் செல்வன் அந்த செலவுகளைக் குறைக்கவேண்டும் என்று நினைத்தார்.
பழைய இரும்பு பொருட்களை கொண்டு பேட்டரி வாகனம் தயாரித்த ஆராய்ச்சி மாணவன் உதிரிபாகங்களால் உருவானது
அதன் ஒரு பகுதியாக, நாம் அன்றாடம் உபயோகித்து இனிமேல் இது உதவாது என்று எண்ணும் நிலைக்கு வந்த பழைய இரும்பு பொருட்களைத் தேடி சேகரித்தார்; பின்னர் அவற்றை ஒன்றிணைத்து பழைய இரு சக்கர வாகனத்தின் சில பாகங்களைக் கொண்டும் பேட்டரி வாகனத்தை தயாரித்து அசத்தியிருக்கிறார், ஆராய்ச்சி மாணவர் தமிழ்ச்செல்வன்.
இதன் மூலமாக, வயலில் பயிரிட்ட வாழை இலைக் கட்டுகள் மற்றும் வாழைத்தார்களை எளிதாகக் கொண்டு செல்கிறார். இதனால், போக்குவரத்திற்காக முன்பு இருந்ததை விட தற்போது மூன்று மடங்கு செலவு குறைத்துள்ளதாகக் கூறுகிறார், போஸ்
வேளாண்பொருட்கள் எளிதில் இடமாற்றம்
இதனால், பெரும் செலவு குறைவதுடன் சுமார் 500 கிலோ வரை இந்த வாகனத்தில் எடை ஏற்றிச் செல்ல முடியும்; இவ்வண்டியில் காய்கறிகள், கால்நடைகளுக்கான தீவனங்கள், வயல்வெளியில் அறுவடை செய்த நாற்றுகள் ஆகியவற்றை சந்தைகளுக்கு கொண்டு சென்றுள்ளதாக தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மாதிரியான பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு தயாரித்த, பேட்டரி வாகனம் தனது தந்தைக்கு கைகொடுத்ததுடன் அதனைக் கண்ட கிராம மக்கள் தங்களது விவசாயத் தேவைகளுக்கும் தமிழ்ச்செல்வனை அணுகி வருகின்றனர். அவர் தான் உருவாக்கிய வாகனத்தை பிற மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அதாவது வெறும் ரூ. 100-க்கு வாடகைக்கு அனுப்பி வருகிறார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர், பிரதமர் மிலாது நபி வாழ்த்து!