சிவகங்கை: உலகப் பொதுமறையாகவும் தமிழரின் வாழ்வியல் நூலாகவும் கருதப்படுகிற திருக்குறளை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகளில் உலகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட திருக்குறள் செயல்பாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து உலக திருக்குறள் கூட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. அவ்வகையில் சிவகங்கை மாவட்டத்தை இரண்டு பகுதிகளாக, பிரித்து வடக்கு மாவட்டமாக காரைக்குடியையும் தெற்கு மாவட்டமாக சிவகங்கையையும் செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாவட்டச் செயல்பாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை தெற்கு மாவட்டச் செயல்பாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான கூட்டம் சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சொ. பகீரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். காரைக்குடி ஆறு.மெய்யாண்டவர், சிவகங்கை தேசிய நல்லாசிரியர் செ.கண்ணப்பன், முன்னிலை வகித்தனர். காசி.இராமமூர்த்தி வரவேற்றார். புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார்.
பின்னர் செயல்பாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மதிப்புறு தலைவராக சொ.பகீரத நாச்சியப்பன், மாவட்டத் தலைவராக சுந்தரமாணிக்கம், மாவட்டச் செயலாளராக புலவர் கா.காளிராசா, மாவட்டப் பொருளாளராக தமிழாசிரியர் ச.செல்வகுமார், மாவட்டத் துணைத் தலைவராக முருகானந்தம், இணைச் செயலராக கவிஞர் சரண்யா ஆகியோருடன் இலக்கிய அணி, கலைத்துறை அமைப்பாளர், சுற்றுச்சூழல் துறை, மகளிர் செயல்பாட்டுத் துறை, திருக்குறள் பள்ளி அமைப்பாளர், இளைஞர் அணி, திருக்குறள் கரண ஆசான் உள்ளிட்ட பதினைந்து பொறுப்பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.