தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இன்னைக்கு தேதி நல்லா இல்ல, 2045ல சாகறேன்' - ஜீவசமாதியை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி - ஜீவ சமாதி திட்டம்

சிவகங்கை: இன்று அதிகாலை ஜீவ சமாதி அடையப்போவதாக அறிவித்திருந்த இருளப்பசாமி தனது திட்டத்தை 25 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

postponement-of-jeeva-samadhi-by-shiva-devotee-irulapasamy

By

Published : Sep 13, 2019, 10:29 AM IST

Updated : Sep 13, 2019, 2:21 PM IST

சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை அடுத்த பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி. இவர் தான் ஒரு தீவிர சிவ பக்தர் என்றும் இன்று அதிகாலை 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணிக்குள் கண்டிப்பாக ஜீவ சமாதி அடையப்போவதாகவும் அறிவித்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து வழக்கம் போல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரது கிராமத்தை நோக்கி அவரது அருளை வேண்டி படையெடுத்தனர். படையெடுத்தவர்களை 'அடித்து' ஆசீர்வாதமும் செய்தார் நம் இருளப்பசாமி.

ஒரே அறிவிப்பால் ஒவர் நைட்டில் உலக ஃபேமஸான இவருக்குக் கூடிய கூட்டத்தால், காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பரபரப்பு கூடியதால், மாவட்ட ஆட்சியர் அங்கு விரைந்தார். இந்திய சட்டப்படி தற்கொலை என்பது தண்டிக்கப்படக் கூடிய ஒரு குற்றம். எனவே மாவட்ட ஆட்சியர் அவரிடம் பேச்சு வார்த்தையோ கைது செய்ய நடவடிக்கையோ எடுப்பார் என்று எதிர்பார்க்க, அவரோ தன் பங்குக்கு ஆசீர்வாதம் வாங்கி தன் கடமையைச் சிறப்பாக செய்தார்.

இந்நிலையில் இரவு 12 மணி முதலே அவரது ஜீவசமாதியைக் காண்பதற்குத் திரண்ட கூட்டம் காத்திருக்க, நேரம் கடந்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. இந்த 'வரலாற்று' நிகழ்வைக் காணக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், அதிகாலை 5 மணியளவில் தனது பணிகள் இங்கு முடியவில்லை எனவும் அதனால் தன் முடிவை மாற்றிக்கொள்வதாகவும் அறிவித்தார் இருளப்பசாமி. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து 2045ஆம் ஆண்டு, தான் கண்டிப்பாக ஜீவசமாதியடைவேன் என்றும் அவர் தெரிவித்தார். அவருக்கு தற்போது வயது 80 என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் அறிவியல் சிந்தனைகளைப் பரப்பி, மூட நம்பிக்கைகளைக் களைய பலர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அரசு இது போன்ற மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள். மேலும், தற்கொலை தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நிலையில், அரசாங்கமே ஜீவ சமாதியடையப் போவதாக அறிவித்தவருக்குப் பாதுகாப்பு கொடுத்துள்ளதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

Last Updated : Sep 13, 2019, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details