சிவகங்கை:இளையான்குடி வட்டம், சாலைக்கிராமம் அருகில் களத்தூர் என்ற கிராமம் உள்ளது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், வசித்து வருகின்றனர்.
தாங்கள் இருக்கும் கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கோ அல்லது வேலைக்குச் செல்வதற்குக்கூட சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் பேருந்தில் பயணிக்கும் சூழல் உள்ளது.
இதனால் அக்கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இக்கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிராம மக்களின் அவல நிலை
இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த நிலை குறித்து தகவல் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் கூட சிரமம் தான்.
கிராமத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் 66 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டாட்சியர் அலுவலகம் சுமார் 33 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி தான் களத்தூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம மக்களுக்கு அரசு உதவிடுமா..?
இக்கிராம மக்களின் கோரிக்கையை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு சென்றும் மாவட்ட நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை எனத்தெரிகிறது. அடிப்படை வசதி இல்லாமல் கவலைக்கிடமாக இருக்கும் களத்தூர் கிராம மக்களுக்கு அரசு உதவிடுமா..? என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அடிப்படை வசதிகள் வேண்டும் இது குறித்து, கிராம மக்கள் வேதனையுடன் கூறும்போது, 'எந்த வசதியும் இல்லாத மழை வாழ் மக்களாக மாவட்ட எல்லையில் கிடக்கிறோம். எங்களின் குரலைக் கேட்க எந்த அலுவலர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ நேரமில்லை.
தேர்தல் நேரத்தில் அதைச் செய்கிறோம்..! இதைச் செய்கிறோம்..! எனக் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால், அரசியல்வாதிகள் ஜெயிச்சிட்டு எதுவும் செய்து கொடுத்த பாடில்லை. எங்களுக்கு முறையான குடிநீர் வசதியோ, சாலை வசதியோ இல்லை. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எங்கள் கிராமத்திற்கு உதவிகளைச் செய்ய வேண்டும்' என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மூங்கில் காட்டுக்குள் பதுங்கிய ஆட்கொல்லி புலி - சுற்றிவளைத்து பிடிக்க வன அலுவலர்கள் தீவிரம்