சிவகங்கை:கீழடி அகழாய்வில் இதுவரை 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று 8ஆம் கட்ட அகழாய்வானது நடைபெற்று வரும்நிலையில் முதன்முறையாக கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியின் உள்ளே நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல்முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்கக்கூடும் எனக் கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தற்போது 8ஆம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் முழுமையாக சேதமடையாமல் ஒரு சில தாழிகள் மட்டுமே உள்ளன.
அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் முழுமையான தாழி திறக்கப்பட்டு, அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. நேற்று இரவு(செப்.15) இரண்டாவது முழுமையான தாழி திறக்கப்பட்டது.
தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்ட குழுவினர் நான்கரை அடி உயரமுள்ள தாழியை திறந்து, அதில் உள்ள பொருட்களை ஆய்விற்காக வெளியில் எடுத்தனர். தாழியினுள் சிதிலமடைந்த மண்டை ஓடும், கை கால் எலும்புகளும் கிடைத்துள்ளன. கொந்தகை தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
8ஆம் கட்ட அகழாய்வில் மட்டும் 57 தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில் அதில் 18 தாழிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று(செப்.15) இரவு 8 மணிக்கு 123ஆவது தாழி திறக்கப்பட்டது. இதுவரை தாழிகளினுள் மண்டை ஓடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவைகள் மட்டும் கண்டறியப்பட்டன.