சிவகங்கை: காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ,"தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகியிருப்பது தமிழ்நாடு அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்வில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரசின் விருப்பம். எதிர்க்கட்சியில் சிலர் மதில் மேல் பூனை போல உள்ளனர். அவர்கள் இணைந்தால் பொது வேட்பாளர் வெற்றி பெறலாம். தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக செயல்பட்டால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் எந்த நாட்டிற்கும் ஏற்படும்.
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு இல்லை. கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குப் பதவி விசயத்தில் நான் பதவி விலகத் தயார். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிகளைப் பெறுவது என்பது காங்கிரஸ் கட்சியில் மட்டும் அல்ல. பா.ஜ.,விலும் உள்ளது. எனவே அந்த நிலை மாற வேண்டும், மாறும். 2024 முதல் மாற்றுவதற்கான நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு ஆதீனங்கள் அரசியிலில் தலையிட கூடாது. அரசும் ஆன்மீக விசயங்களில் தலையிட கூடாது. சட்டத்தில் கணக்கு கேட்க அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. கணக்குகளை சரி பார்ப்பது என்பது வேறு. கோயில் நிர்வாகத்தில் தலையிடுவது என்பது வேறு. கோயில் நிர்வாகத்தில் தலையிடாமல் கணக்குகளை சரிபார்ப்பதற்கு வழி இருக்கிறது. அறநிலையத்துறையும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களும் அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஓராண்டில் இதுவரை தப்பாக எந்த முடிவையும் எடுத்து வைக்கவில்லை. முதலமைச்சர் ஒவ்வொரு முடிவையும் நிதானமாக எடுக்கிறார். உள்நாட்டு நிர்வாகத்தில் மத்திய அரசு முற்றிலும் தோற்று விட்டது. பெட்ரோல், டீசல் விலையை முன்பே குறைத்திருக்க வேண்டும். பண வீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. இது இன்னும் கூடும்.
உணவு பொருட்கள் மீதான பண வீக்கம் 10 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்திருப்பது மேலும் விலை உயர்வு ஏற்படும். அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டு விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டுமே தாமதமான முடிவுகளை அறிவிக்கிறது.
எ.ஐ.சி., பங்கு விற்பனை என்பது ஒரு சோதனை முயற்சி. குளறுபடி முடிவால் எந்த நேரத்தில் விற்பது என்று தெரியாமல் விற்பனை செய்ததால் விற்ற விலையை விட குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுக்கால ஆட்சி. இரண்டரை ஆண்டு கழித்துத்தான் அதை சீர் தூக்கிப் பார்க்க முடியும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது விருப்பம்.
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்தளிக்கும் நிதிகளுக்கான வரிகளைக் குறைப்பதால், மாநிலங்களுக்குத்தான் இழப்பு ஏற்படும். மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்காத நிதி வரவினங்களுக்கான வரியை மத்திய அரசு குறைப்பது இல்லை. ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். மசோதாவைக் கிடப்பில் போடக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: 'நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்து பிரதமரின் கருத்து - ப.சிதம்பரம் பேட்டி