நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது இல.கணேசன் கூறியதாவது, அகில இந்திய கட்சிக்கு தலைவராக இருக்கும் ஒருவர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். ராகுல்காந்தி நேற்று (ஏப்.12) பேசிய பேச்சுக்கள் அபத்தமானது.
காங்கிரஸ் கட்சி இந்திராகாந்தி காலத்தில் இருந்து வறுமையை ஒழிப்போம் ஒன்று சொன்னார்கள். ஆனால் ஒழிக்கவில்லை.
மோடி வறுமையை ஒழிப்பேன் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கான திட்டங்களை சிறப்பாக தீட்டி சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்யவேண்டுமோ அதை செய்திருக்கிறார்.
ராகுல்காந்தி வறுமையை எதிர்த்து நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார். இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மறுபடியும் நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்துவோம் என்று சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது. அவர் பேசிய பேச்சுக்கள் பொறுப்பற்ற பேச்சுக்கள்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து பெறப்போவது இல்லை. அதிக பட்சம் 31 முதல் 40 இடங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது.
இந்தியாவை பொருத்தவரையில் மேட் இன் இத்தாலி என்பது பொருந்தாது. தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று ராகுல் கூறினார்.
இதையே தான் நானும் சொல்கிறேன். வயநாடு பகுதியில் இருந்து ஒரு மலையாளிதான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வேற்றுநாட்டை சேர்ந்த கலப்பினமான ஒருவர் வெற்றிபெறக்கூடாது. என்று அவர் கூறினார்.