சிவகங்கை:திருப்புவனம் வட்டம் திருப்பாச்சேத்தியில் கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவுனர், புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய காளிராசா, “திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அய்யப்பன் மற்றும் சோனைமுத்து ஆகியோர் அளித்த தகவலின்படி அவ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது வாமனச் சின்னங்கள் கோட்டுருவமாக பொறிக்கப்பட்ட எல்லைக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மன்னர்களின் வழியாக கோயில் இறைவனுக்கும், கோயில் பணி சார்ந்த பணியாளர்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டு வந்துள்ளன.
வாமன உருவம்:திருப்பாச்சேத்தியிலும் பாண்டியர் காலம் தொட்டு நிலக்கொடை வழங்கப்பட்டதாகவும், சதுர்வேதிகளுக்கு நிலக்கொடை வழங்கப்பட்ட செய்தியோடு குலசேகரப் பாண்டியன் 13ஆம் நூற்றாண்டில் 40 அந்தணர் குடியிருப்பை ஏற்படுத்தியதாகவும் பதிவுகள் உள்ளன.
நிலதானத்தை குறிக்கும் வாமன உருவம்: திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தில் மாவலி சக்கரவர்த்தி தன்னை உலகில் பெரும் அரசனாக நினைத்து கர்வம் கொண்டிருந்தை அடக்க, மூன்றடி உயரத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்து கையில் குடை மற்றும் கெண்டி என்னும் நீர்ச்செம்புடன் சென்று, தனக்கு தன் காலால் மூன்றடி நிலம் கேட்டு நெடியோனாய் நீண்டு வளர்ந்து தன் காலால் உலகத்தை அளந்து மாவலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அழித்தார்.