சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட ஆகழாய்வு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கீழடி பள்ளிச்சந்தை திடலில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம் சுவரின் தொடர்ச்சி தற்போது ஆறாம் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
இங்கு ஒன்பது குழிகள் தோண்டுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகின்றன. அந்தக் குழிகளில் ஒன்றில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
இப்பகுதியில் அகழாய்வு செய்யும் தொல்லியல் அலுவலர்கள் அதனை மேலும் அகழ்ந்தெடுத்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையே கீழடி அகழாய்வு களத்தை பார்வையிடுவதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்ற காரணத்தால் நான்கு, ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனரில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுரை ஆரப்பாளையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை