சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தலைமை செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து அகழாய்வுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கீழடி அகழாய்வுப் பணிக்காக தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தை வழங்கிய உள்ளூரைச் சேர்ந்த முனைவர் கதிரேசன் ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பேட்டியளித்தார். அதில், "கடந்த ஐந்தாண்டுகளாக கீழடியின் பெருமை உலகளவில் தெரியத் தொடங்கியுள்ளது. பண்டையத் தமிழர்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கும் முன்பாக இங்கே வாழ்ந்துள்ளனர்.
தமிழர்களின் நாகரிகம் குறித்து உலகெங்கும் வாழ்கின்ற மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். பண்டையத் தமிழர்கள் பயன்படுத்தியப் பொருட்கள் அகழாய்வில் கிடைப்பது குறித்து மண்ணின் மைந்தனாகவும், அந்த நிலத்துக்குச் சொந்தக்காரனாகவும் மிகவும் பெருமை கொள்கிறேன்.