தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறது. உலக தமிழர்களின் பார்வையில் மிக அழுத்தமாய் விழுந்துள்ள கீழடி அகழாய்வின் முதல் மூன்று கட்டங்கள் மத்திய தொல்லியல் துறையாலும் நான்காவது, ஐந்தாவது கட்ட அகழாய்வு தமிழ்நாடு தொழில்துறையும் செய்து வருகிறது.
கீழடி அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு - bones found
சிவகங்கை: கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் இன்று சிறிய அளவிலான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சங்ககால கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்ட இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டன. அதற்குப் பிறகு மிக நீளமான செங்கல் சுவரும் ஏறக்குறைய இரண்டு மீட்டர் ஆழமுள்ள உறைக்கிணறும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே சின்னஞ்சிறு அளவிலான எலும்புத் துண்டுகள் தற்போது கிடைத்துள்ளன. இதுகுறித்து ஆய்வாளர்களிடம் கேட்டபோது, இது இங்கு வாழ்ந்த மக்கள் செல்லப்பிராணிகளாகவோ அல்லது அவர்கள் வேட்டையாடி உண்ட விலங்குகளின் எலும்புகளாகவோ இருக்கலாம் என்றனர். வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வில் மேலும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.