சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கிய அகழாய்வுப் பணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பரிமாணம் பெற்று, சற்றேறக்குறைய 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் என்ற பழமையான தொல்லியல் மேடு என்ற பெருமையையும் படைத்துள்ளது.
5ஆம் கட்ட அகழாய்வுக்குப் பிறகு, 6ஆம் கட்ட அகழாய்வில், இறந்தவர்களைப் புதைப்பதற்காக உள்ள பழங்கால இடுகாட்டில் முதன் முறையாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு முன்பாக ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட தொல்லியல் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக கீழடியில் முதல்முறையாக ஈமக்காடு என்றழைக்கப்படுகின்ற பண்டைய இடுகாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழ்நாடு தொல்லியல் துறையின் உதவி இயக்குநர் சிவானந்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர்ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்காக அளித்த சிறப்புப் பேட்டியில், "கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் பகுதிகளில் சங்க காலத் தொல்லியல் மேடு பரவி கிடக்கிறது. இவையனைத்திலும் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த ஆய்வின் முடிவில்தான் இப்பகுதியில் நிலவிய பண்பாட்டின் முழு பரிமாணத்தையும் உணர முடியும். அதனை அடிப்படையாகக் கொண்டே 6ஆம் கட்ட அகழாய்வில் மேற்கண்ட நான்கு இடங்களையும் தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறோம்.
கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், இங்கு தொழிற்கூடங்கள் இருந்ததாக ஆய்வாளர்களிடையே கருதுகோள் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது. 6ஆம் கட்டத்தில் இடம்பெற்றுள்ள கொந்தகையில், இறந்தோரைப் புதைக்கும் ஈமக் காட்டினையும் முதல் முதலாக அகழாய்வு செய்யவுள்ளோம். தற்போதுள்ள வாழ்விடப்பகுதியில் வாழ்ந்த மக்களின் ஈமக்காடாக ஒரு காலத்தில் கொந்தகை திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.