சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை வருங்கால சந்ததியினர், மாணவ மற்றும் மாணவியர், அறிஞர்கள், தொல்லியல் வல்லுநர்கள் மற்றும் அயல்நாட்டு வல்லுநர்கள் என அனைவரும் அறியும் வகையில் காட்சிப்படுத்திட ஏதுவாக, உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மார்ச் 5-ஆம் தேதி பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி - ஒலி காட்சிக்கூடம் உள்ளடக்கி 6 காட்சிக் கூடங்கள் முறையே, 1.கீழடியும் வைகையும், 2.நீரும் நிலமும், 3.கலம் செய் கோ, 4.நெசவுத் தொழில் மற்றும் அணிகலன்கள், 5.கடல் வழி வணிகம், 6.வாழ்வும் வளமும் என அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கீழடி அருங்காட்சியகத்தில் பொருண்மை சார்ந்து அமைக்கப்பட்ட கட்டடங்கள், வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள், கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றுக்கு உரிய விளக்கம் 2 நிமிட உயிரூட்டுக் காட்சியுடன் (Animation) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கடந்த ஏப்ரல் 1 முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கான நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை எனவும், நுழைவுக் கட்டணம் கீழ்க்காணும் விவரப்படி நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டது.
அதாவது உள் நாட்டினருக்கான கட்டணத்தில் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.5 எனவும், வெளி நாட்டவர்களுக்கான கட்டணத்தில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிழற்பட கருவியால் நிழல் படம் எடுக்க விரும்புவோர் ரூ.30ம், வீடியோ எடுக்க விரும்புவோர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதன்படி வசூலிக்கப்பட்டு வருகிறது.