சிவகங்கை:நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றதைப் போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெறும். நீட் விவகாரத்தைப் பல கோணங்களில் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மாநில அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு தேர்வு நடத்தலாமா என்று கேட்டால் வேண்டாம் என்றுதான் சொல்வேன்.
ஆனால் மருத்துவக் கல்லூரிக்கு எப்படி இடம் ஒதுக்க வேண்டும். அது பிளஸ்-2 மதிப்பெண்ணை வைத்தா அல்லது நுழைவுத் தேர்வு வைத்தா? என்பதை முடிவுசெய்ய வேண்டியது கல்வியாளர்கள் என்றுதான் கூறுவேன். அதில் நுழைவுத் தேர்வு வைத்துத்தான் என்றால் அதைச் செய்ய வேண்டியது மாநில அரசுதான். மத்திய அரசின் இந்துத்துவா கொள்கையை எல்லா காலங்களிலும் தமிழ்நாடு மக்கள் நிராகரித்துதான் வந்துள்ளார்கள்.