சிவகங்கை:காரைக்குடி, மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
அந்தவகையில் இந்தாண்டு மாசி-பங்குனி திருவிழா கடந்த மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒருபகுதியாக நேற்று (மார்ச் 13) முத்தாலம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து, அலகு குத்தி அம்மன் சந்நிதி, கல்லுகட்டி வீதி, செக்காலை ரோடு வழியாக முத்துமாரியம்மன் கோயில் வந்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
அப்போது, செக்காலை ரோடு வழியாக பக்தர்கள் சென்றபோது, வெயிலின் தாக்கத்தைக் குறைக்க அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து குழாய் மூலம் சாலையில் நீர் ஊற்றி இஸ்லாமியர்கள் வெப்பம் தணித்தனர்.