சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் 'கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டேன். டிசம்பர் 30ஆம் தேதியில் தேர்தல் நடைபெற்றது.
ஜனவரி 2ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளரை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தேன். திடீரென, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்த அதிமுகவினர், தேர்தல் அலுவலர்களை மிரட்டி அதிமுக வேட்பாளர் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
இதனால், மறுவாக்கு எண்ணிக்கை கோரிய எனது மனு, தேர்தல் தீர்ப்பாயத்தில் நிராகரிக்கப்பட்டது. எனவே, எனது கோரிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். ஆனந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, 'வழக்கறிஞர் மோகன்குமார், வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப்படுகிறார். அவர் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். இதை வீடியோ பதிவு செய்யவேண்டும். இது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 11ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'என்ன முடிவு எடுக்கப்போகிறது மாநில தேர்தல் ஆணையம்? - விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு'